இந்திய கடலோர பாதுகாப்பு படையின் 4 கப்பல்கள் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுக்கு விஜயம் செய்யவுள்ளன. இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல்களான வைபவ் மற்றும் அபிராஜ் திங்கட்கிழமை (23) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.
இக்கப்பல்கள் 23 – 27 வரை அங்கு நங்கூரமிடப்பட்டிருக்கும் என்பதோடு, ஏனைய இரு கப்பல்களும் 29ஆம் திகதி முதல் ஜனவரி 2ஆம் திகதி வரை காலி துறைமுகத்துக்கும் செல்லவுள்ளன.
இக்கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் இலங்கை கடலோரக் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர். மேலும் தீயணைப்பு, அனர்த்தங்கள், கடல் மாசடைவை எதிர்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை தொடர்புகள் பற்றிய கூட்டுப் பயிற்சி ஆகியவை விஜயத்தின் போது இடம்பெறவுள்ளன.
இவை தவிர யோகா நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை நோக்கிய பயணத்தின் போது கப்பல்கள் கடற்கரையை சுத்தம் செய்தல் மற்றும் நடைபயிற்சி போன்ற சமூக செயற்பாடுகளிலும் இக்கப்பல்கள் ஈடுபடவுள்ளன.
இந்திய கடலோரக் காவல்படை மற்றும் அதன் திறனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும், இலங்கை கடலோர பாதுகாப்பு பணியாளர்களுக்கு அவற்றை பார்வையிட அனுமதி வழங்கப்படவுள்ளது.
பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பிற்கான பகிரப்பட்ட சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்காக இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் திறன்களை மேம்படுத்துவதற்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு இந்த கப்பல்களின் விஜயம் அமைந்துள்ளது.