புத்தளம் – சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கல்லி ரயில் மார்க்கத்தில் நேற்று திங்கட்கிழமை (09) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் சிலாபம் வட்டக்கல்லிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தினுக ஷஷேந்திர பெரேரா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வட்டக்கல்லிய ரயில் கடவையில் சமிக்ஞை அமைப்பு செயற்படாததால், ரயில் சமிக்ஞை பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் வந்து ஒரு வாரத்திற்கு முன்னர் அதனை சரி செய்துள்ளபோதும், சிவப்பு ஒளிச் சமிக்ஞை மாத்திரம் 24 மணித்தியாலமும் ஒளிர்ந்து கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். விபத்து இடம்பெற்றபோது ரயில் கடவையில் முதியவர் ஒருவர் கடமையில் இருந்ததாகவும், ரயில் வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த காரணத்தால் ரயில் கடவையின் இரு பக்கங்களிலும் உந்துருளி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதனை அவதானிக்காது வந்த உந்துருளியானது வந்த வேகத்தில் ரயில் வீதியில் நுழைந்துள்ளது.
இதன் போது, கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் உந்துருளி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது உந்துருளியில் பயணித்த ஒரு இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இளைஞன் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த இளைஞனின் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் இருவர் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்குச் சென்ற நிலையில், இளைஞனும் விரைவில் அமெரிக்கா செல்லவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை படுகாயமடைந்த பசிந்து தேத்மிக பெர்னாண்டோ என்ற 20 வயதுடைய இளைஞனும் தொழிலுக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்த இளைஞனின் பிரேதப் பரிசோதனை இன்று சிலாபம் பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.